ஜூன், 05, 2026 - பொதுக்காலம் - ஒன்பதாவது வாரம் - வெள்ளி

முதல் வாசகம்:

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 10-17

அன்புக்குரியவரே, என் போதனை, நடத்தை, நோக்கம், நம்பிக்கை, பொறுமை, அன்பு, மன உறுதி ஆகியவற்றைப் பின்பற்றி வந்திருக்கிறாய். அந்தியோக்கியாவிலும், இக்கோனியாவிலும், லிஸ்திராவிலும் எனக்கு நேரிட்ட இன்னல்களும் துன்பங்களும் உனக்குத் தெரியும். இத்தகைய இன்னல்களைப் பொறுத்துக் கொண்டேன். இவை அனைத்திலிருந்தும் ஆண்டவர் என்னை விடுவித்தார். கிறிஸ்து இயேசுவிடம் இணைந்து இறைப்பற்றுடன் வாழ விரும்புவோர் அனைவரும் இன்னலுறுவர். ஆனால் தீயோர்களும் எத்தர்களும் மேலும் மேலும் கேடுறுவார்கள். ஏமாற்றும் இவர்கள் ஏமாந்து போவார்கள். நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. இறைவா உமக்கு நன்றி!.


பதிலுரைப் பாடல்:

திபா 119: 157,160. 161,165. 166,168 பல்லவி: 165

பல்லவி: உம் திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு நல்வாழ்வு உண்டு.

என்னைக் கொடுமைப்படுத்துவோரும் பகைப்போரும் பலர்; ஆனால், உம் ஒழுங்குமுறைகளை விட்டு நான் தவறுவதில்லை. உண்மையே உமது வார்த்தையின் உட்பொருள்; நீதியான உம் நெறிமுறைகள் எல்லாம் என்றும் நிலைத்துள்ளன. - பல்லவி

தலைவர்கள் என்னைக் காரணமின்றிக் கொடுமைப்படுத்துகின்றனர்; ஆனால், உம் வாக்கை முன்னிட்டு என் உள்ளம் நடுங்குகின்றது. உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. - பல்லவி

ஆண்டவரே! நீர் அளிக்கும் மீட்புக்காக நான் காத்திருக்கின்றேன்; உம் கட்டளைகளைச் செயல்படுத்துகின்றேன். உம் நியமங்களையும் ஒழுங்குமுறைகளையும் நான் கடைப் பிடிக்கின்றேன்; ஏனெனில், என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவை. - பல்லவி


நற்செய்திக்கு முன் கீதம்:

“என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்” என்கிறார் ஆண்டவர்.


நற்செய்தி வாசகம்:

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 35-37

அக்காலத்தில் இயேசு கோவிலில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, “மெசியா தாவீதின் மகன் என்று மறைநூல் அறிஞர் கூறுவது எப்படி? தூய ஆவியின் தூண்டுதலால், ‘ஆண்டவர் என் தலைவரிடம், “நான் உம் பகைவரை உமக்கு அடிபணியவைக்கும் வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று உரைத்தார்’ எனத் தாவீதே கூறியுள்ளார் அல்லவா! தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. கிறிஸ்துவே உமக்குப் புகழ்!.